நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீட்பு!

நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச எல்லை அருகே தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டுள்ளனர். படகில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் 6 மீனவர்களும் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது .

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களை தொடர்புகொள்ளும் முயற்சியும் பலனிக்கவில்லை.

எனவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.