போட்டி நடுவரின் தவறான தீர்ப்பு. ரசிகர்களின் மோதலில் 100 பேர் பலி.
கினியா நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்தனர்.
இதனையடுத்து மற்றொரு தரப்பினரும் மைதானத்திற்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் 2வது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு நேற்று (டிச.1) உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுக்கூடி கண்டுகளித்தனர்.
போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள் ஆவேசத்தில் ஆர்பரித்ததுடன், கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட எதிர் தரப்பு ரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் பலமாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதல் கலவரமாக மாறியது. மைதானத்திற்குள் வெளியேயும், சாலைகளிலும் சண்டையிட்டுக்கொண்ட ரசிகர்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மைதானம் அருகே உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் ஒருவர் கூறுகையில்,
மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பிணவறையும் நிரம்பியுள்ளது. இந்த கலவரத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.