பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு டிசம்பர் 4ல்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட , மலேசிய பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல், டிசம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து இறுதி மரியாதைக்கு , தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் இருக்கும் அவரது வீட்டில் இரவு 8 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்.
டிசம்பர் 4ஆம் தேதி புதன்கிழமை லோக் இயூ இந்து மின் தகனச்சாலையில் இறுதி சடங்கிற்குப் பிறகு, அவரது நல்லுடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் காலமானார்.
அவருக்கு 86 வயது.
அவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது மூன்று பிள்ளைகள் கூறினர்.
நோய்வாய்ப்பட்டபோதிலும் அவர் துடிப்புடன் செயல்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்கள் தந்தை துருக்கியில் படகு ஒன்றில் கடந்த கோடைக்காலத்தைக் கழித்ததாக அவர்கள் கூறினர்.
அப்போதும்கூட அவர் மகிழ்ச்சியுடன் தமது வர்த்தகம் தொடர்பான திட்டங்களிலும் கவனம் செலுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, அவர் சுவிட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் பனிக்காலத்தில் அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளைப் பார்த்து ரசிக்க திட்டமிட்டருந்ததாகவும் ஆனந்த கிருஷ்ணனின் பிள்ளைகள் கூறினர்.
ஆனால், உடல்நிலை மோசமடைந்து அவரது உயிர் பிரிந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மறைந்த ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ், மலேசியாவின் முதல் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ ஆகியவற்றை நிறுவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மலேசிய இந்தியர்களின் அடையாளமாக இருந்து வந்தவர் என மலேசிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின.