பிரித்தானிய தமிழரது கட்டுநாயக்க விமான நிலைய கைது விபரங்கள்
இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்று, இலங்கையில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பிற்கு பணம் சேகரித்து கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் பணத்தை விநியோகித்த நபர் கடந்த நவம்பர் 30ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட விமானத் தடைக்கு இணங்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிளிநொச்சி, ஊராச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் விஜேசுந்தரம், வயது 43. 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்று அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்தவாறு, இந்நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்து, கொழும்பு மற்றும் வன்னி மாவட்டத்தில் இயங்கி வரும் அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த பிரிவின் அதிகாரிகள் 31.05.2012 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையை விதித்தனர்.
இதனை அறியாத சங்கர் விஜேசுந்தரம், கடந்த 30ஆம் திகதி காலை 10.32 மணியளவில் பிரான்ஸ் பாரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது , குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருடன் , இந்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிசார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.