அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் …..
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த கொள்கைப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதம் இன்றும் (03) நாளையும் (04) நடைபெறவுள்ளது.
இதன்படி, சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதம் தொடர்பான வாக்கெடுப்பை மாலை 5.00 மணிக்கு நடத்த கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான தீர்மானங்கள் தொடர்பில் எதிர்வரும் 05ஆம் மற்றும் 06ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. அதன்படி 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு தரப்பு மற்றும் எதிர்க்கட்சிக்கு விவாத நேரத்தை ஒதுக்குதல், குழுக்களில் அரசு தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் அமைப்பை நிர்ணயித்தல், தேர்வுக் குழுவை நிறுவுதல் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளைப் பெறுதல், நாடாளுமன்ற விவகாரக் குழு மற்றும் பிற குழுக்கள், துறைசார் கண்காணிப்புக் குழுக்களை அமைத்தல். பத்தாவது நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு பரிசீலித்தது.