உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பணியாளர்கள் : சுவிசிலிருந்து சண் தவராஜா.
மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் இந்த வருடத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 19 நாடுகளில் இதுவரை மொத்தம் 281 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையான உலக வரலாற்றில் அதுவே அதிகூடிய எண்ணிக்கையாகும். கடந்த வருடத்தில் இந்த எண்ணிக்கை 280ஆக இருந்தது.
இந்த வருடத்தில் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனப் பணியாளர்களுள் 268 பேர் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களின் பணிக்கென உள்நாட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் ஆவர். 13 பேர் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிப் பணியாளர்கள் என்கிறது அறிக்கை.
தொன்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்புத் தரவுத்தளம் எனும் அமைப்பு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தரவுகளைத் தொடர்ச்சியாகத் திரட்டி வருகின்றது. 1990 ஆண்டு முதல் தரவுகளைத் திரட்டி வழங்கும் இந்த அமைப்பின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபையில் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வருடத்தில் இதுவரை கொல்லப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்களுள் சற்றொப்ப மூன்றில் ஒரு பங்கினர் பலஸ்தீனப் பிராந்தியங்களில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலையுண்ட 178 பேரில் 175 பேர் காஸா பிராந்தியத்திலும் மூவர் மேற்குக் கரைப் பகுதியிலும் கொல்லப்பட்டுள்ளனர். 2023 அக்டோபர் 7ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் மொத்தம் 333 மனிதாபிமானப் பணியாளர்கள் காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் முதல் இதுவரை கொல்லப்பட்டவர்களுள் அநேகர் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண அமைப்பின் பணியாளர்கள் ஆவர்.
இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியது. இதன் பின்னான காலப்பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான பதில் தாக்குதலிலேயே இந்த மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனத்துக்கு வெளியே 103 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக சூடானில் 25 பேரும் உக்ரைன் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் தலா 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தவிர தென் சூடான், ஆப்கானிஸ்தான், யேமன், லெபனான் உள்ளிட்ட வேறு பல நாடுகளிலும் இத்தகைய கொலைகள் இடம்பெற்றுள்ளன.
போர் நடைபெறும் பிரதேசங்களிலும், இயற்கை அநர்த்தங்கள் நிகழ்ந்த பிரதேசங்களிலும் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். உணவு விநியோகம், தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்து வழங்குதல், மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தல், சுத்தமான குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் என அவர்களது பணி பல நோக்குக் கொண்டது. பன்னாட்டுச் சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்கள் பணியாற்றுகிறார்கள். போரில் ஈடுபடும் தரப்புகளுக்கு அவர்களது பணி தொடர்பிலான விரிவான தகவல்கள் வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரேயே அவர்கள் போர்ப் பிரதேசங்களில் பிரவேசிப்பார்கள். மனிதாபிமானப் பணியாளர்களின் சேவைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரு தரப்பும் இணங்கிக் கொண்டு தற்காலிக தாக்குதல் ஓய்வை அறிவிப்பதும் வழக்கமானது.
மக்களைக் காக்க வேண்டியதும் இடர்களின் போது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால், போர்ப் பிராந்தியங்களில் அரச இயந்திரங்கள் செயலிழக்கும் நிலையில் மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொண்டு நிறுவனங்களும் அதன் பணியாளர்களும் அவசியமாகத் தேவைப்படுகின்றனர்.
பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறைச் சங்கம், அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், யுனிசெப், எல்லைகளற்ற மருத்துவச் சங்கம் எனப் பல பன்னட்டுத் தொண்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் இத்தகைய பணியில் உலகளாவிய அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன. தன்னலம் கருதாது செயற்படும் இத்தகைய நிறுவனங்களுக்கு சர்வதேச அடிப்படையில் அரசாங்கங்களும், வர்த்தக நிறுவனங்களும் நன்கொடைகளை வழங்கி ஊக்குவிக்கின்றன. இத்தகைய உதவி அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளுக்குப் பெரிதும் உதவுவதுடன் அந்த நிறுவனங்களுக்கு ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகின்றது.
இவ்வாறான நிறுவனங்களின் பணியை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்துள்ளன. அத்தோடு அத்தகைய உதவி நிறுவனங்களுக்கும் அதன் தொண்டர்களுக்கும் தேவையான கௌரவத்தையும் பாதுகாப்பையும் வழங்கி நிற்கின்றன. ஆனால், பன்னாட்டுச் சட்டங்களைக் கிஞ்சித்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இஸ்ரேல் போன்ற நாடுகள் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உயிர்களைப் பொருட்டாக மதிப்பதில்லை.
தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொலை செய்யப்படுவதற்கும் அப்பால் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், தாக்குதலுக்கு இலக்காகுதல் உள்ளிட்ட துன்பங்களையும் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இத்தனை துன்பங்களையும் எதிர்கொண்டு தெண்டு நிறுவனப் பணியாளர்கள் உலகின் பல நாடுகளிலும் குறிப்பாக போர் நடைபெறும் பிரதேசங்களில் தொடர்ந்து தமது பணியைத் துணிகரமாக ஆற்றிய வண்ணமேயே உள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் அத்தியாவசிய உதவி தேவைப்பட்ட 144 மில்லியன் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தங்கள் பணியாளர்களுக்கு எதிரான இத்துணை வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுள்ள தொண்டு நிறுவனங்கள் இந்த வருடத்தில் இதுவரை 116 மில்லியன் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை உலகின் பல பாகங்களிலும் வழங்கி உள்ளன.
மறுபுறம், போர்ப் பிரதேசங்களில் நடைபெறும் ஆயுத மோதல்களின் போது பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடத்தில் உலகெங்கும் நடைபெற்ற 14 ஆயுத மோதல்களில் 33,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த மரணங்களின் எண்ணிக்கை 72 விழுக்காடு அதிகம் என்று அதிர்ச்சி ஊட்டுகிறது இந்த அறிக்கை.
தொண்டு நிறுவனங்களினதும் அவற்றின் பணியாளர்களதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பன்னாட்டுச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் அவை உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்து மீறப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த 30 வருடங்களாகவே இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படும் தீவிரவாதக் குழுக்கள் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது சிரமமானது. ஆனால், சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய அரசாங்கங்களே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் யார் நடவடிக்கை எடுப்பது? குறிப்பாக உலக வல்லரசு எனக் கருதப்படும் அமெரிக்காவின் கைப்பிள்ளையாகச் செயல்படும் இஸ்ரேல் அரசாங்கம் இத்தகைய குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் நிலையில் வெற்றுக் கண்டனங்களாலும், ஐ.நா. சபையில் நிறைவேற்றப்படும் கண்டனத் தீர்மானங்களாலும் விளையப் போகும் பயன் என்ன?