திருவண்ணாமலை நிலச்சரிவில் புதையுண்ட 7 பேரில் 4 பேரின் உடல்களும், 3 பேரின் உடல் பாகங்களும் மீட்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த,

ராஜ்குமார்,

அவரது மனைவி மீனா,

மகன் கௌதம்,

உறவினர்கள் மகா,

இனியா,

விநோதினி,

ரம்யா உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

நேற்றிரவு நிலவரப்படி மேற்கண்ட 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வந்த கள நிலவரங்கள் தெரிவித்தன. 3 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதையுண்ட 7 பேரில் 4 பேரின் உடல்கள் மட்டுமே முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 3 பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வீட்டினுள்ளே சிக்கிக்கொண்ட 3 பேரின் உடல்களையும் மீட்கக்கோரி அவர்களது உறவினர்களும் அப்பகுதி மக்களும் இன்று(டிச. 3) காலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்த மீட்புப்பணி நேற்றிரவு மழை மற்றும் இருள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்புப்பணியில் இன்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுளனர். ஜேசிபி வாகனம் மூலம் மண்ணை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியிருக்கும் உடல் பாகங்களை மீட்க நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.