தென்கொரியாவின் ராணுவ ஆட்சி சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்த ராணுவ ஆட்சிச் சட்டம் புதன்கிழமை (டிசம்பர் 4) மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு சக்திகள் கலகத்துக்குத் திட்டமிடுவதாகக் கூறி அதிபர் யூன் ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 157 நிமிடங்களுக்குப் பதற்றம் நீடித்த நிலையில், தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சட்ட அமலாக்கத்தைத் திரும்பப்பெற வாக்களித்தனர்.
புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ராணுவ ஆட்சிச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, டிசம்பர் 3ஆம் தேதி இரவு 10.23 மணிக்கு, அதிபர் யூன் தொலைக்காட்சி உரை மூலம் அவசரகால ராணுவ ஆட்சிச் சட்டத்தை அறிவித்தார்.
அதையடுத்து இரவு 10.40 மணிக்குத் தென்கொரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான கொரிய ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்ற அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அக்கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங், ராணுவ ஆட்சிச் சட்டத்தை மீட்டுக்கொள்ளும் நடைமுறை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாடாளுமன்றத்துக்கு வரும்படி வலியுறுத்தினார்.
அதிபர் யூனின் ஆளுங்கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூனும் நாடாளுமன்றத்துக்கு விரைந்தார். அச்சட்ட அமலாக்கத்தை ரத்து செய்ய அவரும் அழைப்பு விடுத்தார்.
இரவு 11 மணிக்குத் தெர்ன்கொரியாவில் ராணுவ ஆட்சிச் சட்டம் நடப்புக்கு வந்தது. இரவு 11.14 மணிக்கு நாடாளுமன்ற நாயகர் வூ வோங்-ஷிக் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்த வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வரத் தொடங்கினர்.
ரத்து செய்யும் நடைமுறைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 150 பேர் வாக்களிக்க வேண்டும். நள்ளிரவுவாக்கில், உறுப்பினர்களில் 150க்கும் அதிகமானோர் கூடியதால் நாடாளுமன்ற முக்கிய அறையின் கதவு உட்பக்கம் தாழிடப்பட்டது.
சிறப்பு நடவடிக்கைப் பிரிவினர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துசேர்ந்தனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், நாடாளுமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்தன. படையினர் சிலர் நாடாளுமன்ற வளாகத்தின் முக்கியக் கட்டடத்தினுள் நுழைந்தனர்.
பின்னிரவு 1 மணிவாக்கில் தொடங்கிய நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில், ராணுவ ஆட்சிச் சட்டத்தை மீட்டுக்கொள்ளக் கோரும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அது ஒருமனதாக அனைவரின் ஆதரவையும் பெற்றதை அடுத்து, ராணுவ ஆட்சிச் சட்டம் செல்லாது என்று மன்ற நாயகர் பின்னிரவு 1.04 மணிக்கு அறிவித்தார். ஆயுதப் படையினர் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
அதிகாலை 4.26 மணிக்கு, மீண்டும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் யூன், ராணுவ ஆட்சிச் சட்ட அமலாக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.
பின்னர் அதிகாலை 4.40 மணிக்கு அச்சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காலை 6 மணிக்கு, அதிபர் யூன் மீது உடனடியாக அரசியல் குற்றச்சாட்டு சுமத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. ஆளுங்கட்சித் தலைவர் ஹான், தற்காப்பு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும்படி அதிபர் யூனை வலியுறுத்தினார்.
காலை 9 மணியளவில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான கூட்டத்தை அதிபர் யூன் ஒத்திவைத்தார். அதிபர் அலுவலக மூத்த ஊழியர்கள் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளனர்.