போருக்குப்பின் காஸா நிர்வாகத்திற்கான கூட்டுக் குழுவிற்கு இணக்கம்

போருக்குப் பிறகு காஸாவில் ஆட்சி நடத்துவதற்கான கூட்டுக் குழுவை அமைக்க ஹமாஸ் குழுவினரும் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாசின் ஃபட்டா கட்சியினரும் இணங்கியுள்ளனர்.

இரு தரப்பு சார்பிலும் பேச்சு நடத்தியவர்கள், டிசம்பர் 3ஆம் தேதி இதைத் தெரிவித்தனர்.

அதிபர் அப்பாஸ் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

கூட்டுக் குழுவில் கட்சி சார்பற்றவர்கள் 10லிருந்து 15 பேர் இடம்பெற்றிருப்பர். பொருளியல், கல்வி, சுகாதாரம், மனிதநேய உதவி, மறுகட்டுமானம் தொடர்பான விவகாரங்களில் அவர்கள் அதிகாரம் பெற்றிருப்பர் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் பார்வையிட்ட பரிந்துரையின் நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுகளுக்கு எகிப்து ஏற்பாடு செய்தது.

எகிப்து எல்லையில் அமைந்துள்ள ராஃபா சோதனைச்சாவடியின் பாலஸ்தீனப் பகுதியை அந்தக் கூட்டுக் குழு நிர்வகிப்பதற்கு ஹமாசும் ஃபட்டா கட்சியும் இணங்கியுள்ளன.

அக்கட்சியின் பேராளர் குழுவிற்கு, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அஸ்ஸாம் அல்-அகமது தலைமை தாங்கினார்.

பேராளர்கள் டிசம்பர் 3ஆம் தேதி ரமல்லா திரும்பி, அதிபர் அப்பாஸின் ஒப்புதலை வேண்டுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஹமாஸ் பேராளர் குழுவிற்கு உச்ச ஆட்சிக் குழு உறுப்பினர் கலில் அல்-ஹய்யா தலைமை தாங்கினார்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் அரசதந்திர முயற்சிகள் புதுப்பிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த இணக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.