வறுமை நிலையிலுள்ள மாணவர்களுக்கு 2025 முதல் 6,000 ரூபா விசேட கொடுப்பனவு : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு 2025 முதல் 6,000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில், உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்களின் எதிர்பார்ப்புக்கமையவே நாம் செயற்படுவோம். கடந்த காலங்களில் ஒட்டுமொத்த மக்களும் பாராளுமன்றத்தை விமர்சித்ததுடன் புறக்கணித்தார்கள்.
பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை புதுப்பிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய பாராளுமன்றம் செயற்பட வேண்டும் என்பதை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை, கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு கட்சித் தலைவர்களுக்குண்டு.
அதனை விடுத்து ஊடகங்களுக்கு மத்தியில் மாத்திரம் அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அவர்கள் குறிப்பிடுவது பயனற்றது. காலநிலை சீர்கேட்டினால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளளது. இடர்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு ஏக்கர் விவசாய பயிர்ச்செய்கைக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு வெகு விரைவில் தீர்வு எட்டப்படும். ஆகவே அரிசி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 55 சதவீதமான மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. 53.2 மாணவர்கள் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதை வரையறுத்துள்ளார்கள். 29.1 சதவீதமான மாணவர்கள் பழைய புத்தகங்களையும், கொப்பிகளையும் பயன்படுத்துகிறார்கள். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.