சம்பலில் ஆய்வு நடத்துவதற்காக சென்ற ராகுல் காந்தியை தடுத்ததால் பரபரப்பு!

உத்தரப் பிரதேச எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சம்பல் மாவட்டத்தில் வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்முறை பகுதியை ஆய்வு செய்ய சென்ற ராகுல் காந்தியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது.

மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பதற்றத்தை தனிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளிஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சம்பலில் ஆய்வு நடத்துவதற்காக தில்லியில் இருந்து காரிலேயே இன்று காலை புறப்பட்டனர்.

காஸிப்பூர் எல்லையில் சம்பல் ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து, ராகுல், பிரியங்கா பயணித்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் எல்லையில் குவிந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. ராகுல் மற்றும் பிரியங்காவுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.