ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம். பீதியடைந்த மக்கள்.
ஹைதராபாத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று காலை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹைதராபாத், தெலங்கானாவின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.
வீடுகளில் இருந்த பொருட்கள் எல்லாம் உருண்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவில் பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் குடியிருப்பு வாசிகள் விழிப்புடன் இருக்கவும் பூகம்பங்கள் ஏற்படும் போது நெரிசலான மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கம் தெலங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் குறித்து பதிவிட்டுள்ள தெலங்கானா வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆர்வலர்,
“கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தெலங்கானாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் முலுகுவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஹைதராபாத் உட்பட முழு தெலங்கானாவும் நடுக்கத்தை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நான்கு நில அதிர்வு மண்டலங்கள் உள்ளன, மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4, மற்றும் மண்டலம் 5. இதில் மண்டலம் 5 ஆனது நிலநடுக்கத்தை அதிக அளவில் சந்திக்கிறது. அதேசமயம் மண்டலம் 2 மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வுடன் தொடர்புடையது. தெலங்கானா 2வது மண்டலமான குறைந்த தீவிரம் கொண்ட மண்டலத்தில் உள்ளது.
இந்திய நாட்டின் 11% பகுதி 5 மண்டலத்திலும், சுமார் 18% மண்டலம் 4 மண்டலத்திலும் சுமார் 30% மண்டலம் 3வது மண்டலத்திலும் உள்ளது. மீதமுள்ள பகுதிகள் 2வது மண்டலத்தில் உள்ளன. இந்தியாவின் நிலப்பரப்பில் தோராயமாக 59% பகுதி வெவ்வேறு தீவிரங்களின் பூகம்பங்களுக்கு ஆளாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.