கொரோனா மூன்றாவது அலையில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது! மக்களின் கையில்தான் முடிவு; இராணுவத் தளபதி
கொரோனா மூன்றாவது அலையில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது!
மக்களின் கையில்தான் முடிவு; இராணுவத் தளபதி அறிவிப்பு
“இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையில் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கது. மக்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகாமல் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.”
இவ்வாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பிலும் நோய் அறிகுறிகள் இருப்பினும் உடனடியாக சுகாதார பிரிவிடம் மக்கள் அறிவித்து ஆலோசனை பெற வேண்டும்.
கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் நெருங்கிச் செயற்பட்டவர்களுக்குத் தேவையான வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அவசியமான அளவு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அதன் அவசியம் அதிகரித்தால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை வரம்பை எட்டியுள்ளமையால் பல வைத்தியசாலைகளளில் சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” – என்றார்.
நாட்டின் தற்போதைய நிலைமை எதிர்வரும் வாரங்களுக்குள் சீராகுமா என இராணுவத் தளபதியிடம் வினவியபோது, “இது தொடர்பில் ஒன்றும் கூற முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில், கொரோனாத் தொற்றுக்குள்ளாகாமல் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகும்” – என்றார்.