கொழும்பில் உள்ள பிரபல சூதாட்ட விடுதி முற்றுகை.

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை செய்யப்பட்டு வந்த பிரபல சூதாட்ட விடுதியொன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கலால் ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்க்கு மேலாகும்.
5 மாடி கேசினோவின் ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ள கவுண்டர்களில் , வருகை தரும் உறுப்பினர்களுக்கு இலவச மதுபானம் வழங்குகின்றன.
ஆனால், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உரிமத்தின் மூலம் ஒரு மதுபான கவுன்டரை மட்டுமே பராமரிக்க முடியும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கலால் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு நகர கலால் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.