பரீட்சையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானம் : பஸ் உரிமையாளர்கள் சங்கம்
தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 09ம் திகதி முதல் பஸ் வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடாது என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பஸ் தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில் மொத்த பஸ்களின் எண்ணிக்கையில் 60% ற்கும் குறைவான பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுகிறது. தொடர்ச்சியான நஷ்டத்தில் பஸ் போக்குவரத்து இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்களின் உயிரும் ஆபத்தில் உள்ளது என்று தெரிவிக்கும் கெமுனு இது தொடர்பாக அதிகாரிகளால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உயர் தர பரீட்சை மாணவர்களின் வசதிக்காக, பேருந்துகள் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன, பரீட்சைகள் முடிந்தவுடன் உடனடியாக பஸ் போக்குவரத்தில் இருந்து விலகுவதை தவிர வேறு வழி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.