வெளிநாட்டு லாட்டரியில் இந்தியருக்கு முதல் பரிசு

அபுதாபியில் இடம்பெற்ற ‘பிக் டிக்கெட்’ பரிசுச்சீட்டுக் குலுக்கலில் இந்தியருக்கு முதல் பரிசு விழுந்துள்ளது.

ஷார்ஜாவில் வசித்துவரும் அரவிந்த் அப்புக்குட்டன் என்ற அவர், மேலும் 20 பேருடன் சேர்ந்து பரிசுப்பணத்தைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.

269ஆவது முறையாக ‘பிக் டிக்கெட்’ பரிசுச்சீட்டுக் குலுக்கலின் முதல் பரிசு 25 மில்லியன் திர்ஹாம் (S$9.17 மில்லியன், ரூ.57.7 கோடி).

கடந்த ஈராண்டுகளாகப் பரிசுச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அரவிந்த். இந்நிலையில், கடந்த நவம்பர் 22ஆம் தேதி அவர் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு முதல் பரிசு விழுந்தது.

“எனக்குப் பரிசு விழுந்தது குறித்து என் நண்பர்தான் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவித்தார்,” என்று அரவிந்த் சொன்னார்.

“எனக்குப் பரிசு விழும் என எதிர்பார்க்கவில்லை. பரிசுப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் அரவிந்த்.

விற்பனையாளராகப் பணிபுரியும் அவர், தமக்கு முதல் பரிசு விழுந்த செய்தியை அறிந்து தம் மனைவியும் நண்பர்களும் வியப்படைந்ததாகக் கூறினார்.

இவ்வாண்டில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பலருக்குப் பரிசுச்சீட்டுக் குலுக்கலில் பரிசு விழுந்ததால் ஒரே நாளில் பணக்காரர்களாகிவிட்டனர்.

பரிசுச்சீட்டுக் குலுக்கலில் 20 பேருடன் முதல் பரிசைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் அப்புக்குட்டன்.

Leave A Reply

Your email address will not be published.