தமிழக மக்களுக்குத் துணை நிற்போம்: பினராயி விஜயன்
புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு கேரளா அனைத்து வகையிலும் துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அனைவரும் ஒன்றிணைந்து இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வீசிய ஃபெங்கல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தமிழகத்தின் 14 மாவட்டங்கள் கடும் சேதங்களை எதிர்கொண்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் தமிழகத்துக்கு கேரளம் துணை நிற்கும் என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
“புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுடன் எங்களின் எண்ணங்கள் உள்ளன. இந்தச் சவாலான வேளையில் அண்டை மாநிலத்துடன் கேரளம் உறுதுணையாக நிற்கிறது.
“தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கேரளா தயாராக உள்ளது,” என முதல்வர் பினராயி விஜயன் மேலும் தெரிவித்துள்ளார்.