கலால் உரிமம் வழங்குவது குறித்த ஜனாதிபதியின் முடிவு
மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிம அனுமதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலால் வரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சஹாநாயக்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் கலால் உரிமம் பெற்றவர்களின் பட்டியலை பராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.
அந்த காலப்பகுதியில் 361 கலால் வரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, மாதாந்த நிலுவைத் தொகையான 5.7 பில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியதன் காரணமாக, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உரிமத்தை நேற்று முதல் இடைநிறுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்தாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் இம்மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்கப்பட மாட்டாது என்றும் மதுவரித் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.