அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி பரிமாறுவதற்கு தடை!

அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கும் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறினார்.

அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.