தேங்காய்க்குப் பஞ்சமில்லை! அமைச்சர் வசந்த சமரசிங்க
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், சந்தையில் செயற்கையான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 14 வீதம் குறைந்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தையில் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சந்தையில் தேங்காய் மாபியாவை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களிலிருந்து சதொச விற்பனை நிலையங்கள் மூலம் தேங்காய்களை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், குருநாகல் மற்றும் சிலாபம் தோட்டங்களில் இருந்து பத்து இலட்சம் தேங்காய்களை வழங்குவதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐந்து இலட்சம் தேங்காய்களை வழங்குவதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு பெரிய தேங்காய் மொத்த விலை ரூ.160க்கு சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கப்பட்டாலும், அதிக லாபம் ஈட்டுவதற்காக, ஒரு தேங்காய் ரூ.180-220 வரை பல்வேறு சில்லறை விலைகளில் விற்கப்படுகிறது.
மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யும் தேங்காய்கள் சில கெட்டுப்போவதாகவும், நஷ்டத்தை ஈடுகட்ட தேங்காய் ஒன்றுக்கு 30-40 ரூபாய் மேலதிகமாக வைத்து லாபம் ஈட்டுவதாகவும் சில்லரை வியாபாரிகள் கூறுகின்றனர்.