கந்தம்பாளையம் அருகே பண்ணை தீப்பற்றி எரிந்ததில் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் கருகி சாவு!
கந்தம்பாளையம் அருகே பண்ணை தீப்பற்றி எரிந்ததில் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி இறந்தன.
பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (58). இவா் அருணகிரிபாளையம், ஊஞ்சல்கொடை தோட்டத்தில் உள்ள தனது விவசாயத் தோட்டத்தில் பண்ணை வைத்து சுமாா் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஆடுகளுக்கு விறகு அடுப்பில் கூழ் காய்ச்சியுள்ளாா்.
பின்னா் அடுப்பை அணைக்க மறந்த நிலையில், கந்தம்பாளையத்தில் உள்ள வங்கிக்குச் சென்று உள்ளனா். இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடுப்பு தீ நாட்டுக்கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கீற்று மற்றும் தகரக் கொட்டகைக்கு பரவியது. இதில் நாட்டுக்கோழிப்பண்ணை தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் பண்ணையில் இருந்த சுமாா் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி இறந்தன. இதுகுறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கந்தம்பாளையம் அருகே தீப்பற்றி எரிந்த நாட்டுக்கோழிப் பண்ணை.