பிகார் மாநிலத்தில் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக வயிற்றில் குண்டு பாய்ந்தும் 5 கி.மீ. ஜீப்பை ஓட்டிய ஓட்டுநர்!
பிகார் மாநிலத்தில், பக்தர்களுடன் கோயிலிலிருந்து ஹேமத்புர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் ஓட்டுநர் மீது துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்ட நிலையிலும், பயணிகளைக் காப்பாற்றுவதற்காக 5 கி.மீ. வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரின் தீரம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் திலக் விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் வந்த ஜீப் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜீப் ஓட்டுநரான சந்தோஷ் சிங், கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச்சென்றுவிட்டு திரும்புகையில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில், ஜீப்பில் இருந்த 15 பயணிகளை அப்படியே விட்டுவிடாமல், அவர்களது பாதுகாப்புதான் முக்கியம் என கருதி 5 கி.மீ. தொலைவுக்கு ஜீப்பை வேகமாக ஓட்டி வந்து பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார்.
ஆனால், வயிற்றில் பாய்ந்த குண்டு அவரது குடல் பகுதிகளை கடுமையாக சேதமடையச் செய்துவிட்டதால், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
அவரது ஒட்டுமொத்த வயிற்றுப் பகுதியும் சேதமடைந்திருப்பதாகவும் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது ஒரு வாரத்துக்கு எதுவும் சொல்ல முடியாது. தற்போதைக்கு அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பயங்கரவாத தாக்குதலா, உள்ளூர் கொள்ளை கும்பலின் தாக்குதலா என பிகார் மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் வந்த வாகனத்தைக்கொண்டு அவர்களை அடையாளம் காணும் பணி நடப்பதாகவும் கூறப்படுகிறது.