வரி செலுத்தாத 8 மதுபான நிறுவனங்களின் உரிமம் ரத்து.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத 8 மதுபான நிறுவனங்களின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று நிறுவனங்கள், நார்த் வெஸ்ட் டிஸ்டில்லரீஸ், மெக்கலம் ப்ரூவரி லிமிடெட், குளோப் பில்டர்ஸ் லங்கா நிறுவனம், களுத்துறை கூட்டுறவுச் சங்கம் மற்றும் நார்த் வெஸ்ட் ஸ்டோர்ப் காம்ப்ளக்ஸ் நிறுவனம் ஆகியவை வரி செலுத்தாதவை எனவும் , நார்த் வெஸ்ட் டிஸ்டில்லரீஸ், மெக்கலம் ப்ரூவரி லிமிடெட் ஆகியவற்றிடம் வரி பெற முயன்ற மதுவரித் துறைக்கு எதிராக அவர்களால் வழக்கு தொடரப்பட்டது என அமைச்சர் மேலும் கூறினார் .
டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் மட்டுமே ரூ.580 கோடி நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றில் ஒரு நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரி பாக்கியை செலுத்தவில்லை எனவும், 2023 ஆம் ஆண்டு மற்றுமொரு நிறுவனம் இந்த வருடமும் செலுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வரி பாக்கியை செலுத்தாத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கலால் வரிச் சட்டத்தின்படி அவர்களது சொத்துக்களை விற்று பணத்தை மீட்பதற்கு அரசு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.
நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு முதல் சில நிறுவனங்கள் வரி பாக்கியை செலுத்த தவறிவிட்டதாகவும் அவர் கூறினார்.