அரிசி போதுமானது என முதல் அறிக்கை கிடைத்தது.. அடுத்து போதாது என வந்தது.. எனவே அரிசியை இறக்குமதி செய்கிறோம்..- ஜனாதிபதி
நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பிலான தகவல்கள் பிரச்சினைக்குரியவை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விவசாய திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் பிரகாரம் நாட்டில் போதியளவு அரிசி உள்ளதாகவும், ஆனால் நுகர்வோர் அதிகாரசபையின் அறிக்கையின் பிரகாரம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்ததால் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். .
இதன்படி அரிசி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு 50,000 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 20 ஆம் திகதி கிடைக்கும் என ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.
நாட்டில் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாங்கள் வந்து கொஞ்ச நாளில் விவசாயத் திணைக்களத்திடம் இருந்து நாட்டிற்கு தேவையான அளவு அரிசி இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனால் நுகர்வோர் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.
இதை இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமையாக்க அனுமதிக்க முடியாது. இப்போது அவர்களுக்கு அந்த பலம் கிடைத்துள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை. நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார் ஜனாதிபதி.