இன்று மீண்டும் திறக்கப்படுகிறது ‘நோட்ர டேம்’ தேவாலயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்திருக்கும் ‘நோட்ர டேம்’ தேவாலயம் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு சனிக்கிழமை (டிசம்பர் 7) இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குமுன் மூண்ட தீயில் அந்தத் தேவாலயம் சேதமடைந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதன் கூரையில் பெருந்தீ மூண்டது.
பாரிஸ் நகரில் வசிப்போர் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பலரையும் அது அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
‘நோட்ர டேம்’ தேவாலயம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்படும் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக அவர் கலந்துகொள்வதாகக் கென்சிங்டன் அரண்மனை, வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பும் அதில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.
இவ்வாரப் பிற்பகுதியில் தேவாலயம், கத்தோலிக்கர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் திறந்துவிடப்படும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.