சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்.. நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்…
சிரியா அதிபர் பஷார் அல்-அசாதின் (Bashar al-Assad) ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாய் சிரியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
தலைநகர் டமாஸ்கஸ் (Damascus) இப்போது அதிபர் அசாதின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாய்க் கிளர்ச்சியாளர்கள் கூறினர்.
சற்று முன்னர் திரு அசாத் டமாஸ்கஸ் நகரிலிருந்து தெரியாத இடத்திற்கு விமானம் வழிப் புறப்பட்டதாக 2 மூத்த ராணுவ அதிகாரிகள் Reuters செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
தலைநகர் டமாஸ்கஸினுள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததை அடுத்து அவர் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல்லாயிரம் பேர் கார்களிலும் நடந்தும் டமாஸ்கஸ் நகரின் முக்கிய நடுவத்தில் கூடி “சுதந்திரம்” என்று கூச்சலிட்டதாக அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
செட்னயா எனும் ஆகப்பெரிய ராணுவச் சிறையில் நடந்த அநீதி முடிவுக்கு வந்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறினர்.
அங்கிருந்த கைதிகளை விடுதலை செய்த செய்தியைக் கிளர்ச்சியாளர்கள் சிரியா மக்களுடன் கொண்டாடுகின்றனர்.
டமாஸ்கஸ் நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள அந்தச் சிறையில் சிரியா அரசாங்கம் பல்லாயிரம் பேரைத் தடுத்து வைத்ததாகக் கூறப்பட்டது.
தலைநகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளதாய்ச் செய்தி வெளியான நேரத்தில் சிரியா விமானம் ஒன்று டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
அந்த விமானம் சிரியாவின் கரையோர பகுதியை நோக்கிப் பறந்ததாகவும் பிறகு அங்கிருந்து விமானத்தின் திசை திரும்பியதாகக் கூறப்பட்டது.
அந்த விமானம் இருக்கும் இடம் தெரியவில்லை.
விமானத்தில் யார் இருந்தார் என்பதை Reuters செய்தி நிறுவனத்தால் உறுதிசெய்ய முடியவில்லை.