சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக ரஷ்யா உறுதிப்படுத்தியது .
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மற்றும் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேறி, அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கான அறிவுறுத்தல்களை வழங்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த கலந்துரையாடலில் ரஷ்யா பங்கேற்கவில்லை என வெளிவிவகார அமைச்சு மேலும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும், அந்த தளம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அசாத்தின் அரசாங்கம் கவிழ்ந்த போதிலும், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ரஷ்யா நெருக்கமாகச் செயற்படுவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பஷர் அல்-அசாத்தின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றான ரஷ்யா, அவர் ஆட்சியில் நீடிக்கத் தேவையான இராணுவ உதவிகளை முன்னர் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.