இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி வெற்றியை நோக்கி….

தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கெபேஹாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 358, இலங்கை 328 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 191/3 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் கேப்டன் பவுமா அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது ஸ்டப்ஸ் (47) அவுட்டானார். பவுமா 66 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் பெடிங்காம் (35) ஓரளவு கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 317 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.
பின், 348 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் (29), மாத்யூஸ் (32), கமிந்து மெண்டிஸ் (35) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது, 143 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் தனஞ்செயா டி சில்வா (39), குசால் மெண்டிஸ் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.