உக்ரேன் போருக்குத் அமைதிதீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்: ஜெய்சங்கர்.
ரஷ்யா-உக்ரேன் போருக்குத் தீர்வு பிறக்கக்கூடும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
“நிலைமை, போர் தொடர்வதைவிட பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது,” என்று ஜெய்சங்கர் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) கூறினார். கத்தார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசினார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ சென்றும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்திக்க கியவ் சென்றும் இருவருக்குமிடையே வெளிப்படையான முறையில் தகவல்களை வழங்கியதன் மூலம் இந்த விவகாரத்தில் இந்தியா சொன்னதைச் செய்து வருவதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
“உதவியாக இருக்கக்கூடிய, இரு தரப்புக்கும் பொருந்தும் அம்சங்களை இந்தியா அடையாளம் காண முயற்சி செய்து வருகிறது,” என்றும் அவர் விளக்கினார்.
உலகின் தெற்குப் பகுதியில் உள்ள இதர 125 நாடுகளின் அக்கறைகளை அவற்றின் சார்பில் இந்தியா முன்வைப்பதாக ஜெய்சங்கர் சுட்டிக் காட்டினார். ரஷ்ய-உக்ரேன் போரால் அந்த நாடுகள் எரிவாயு, உணவு மற்றும் தாவர உரத்தின் விலை, பணவீக்கம் ஆகியவற்றின் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.