இணையக் குற்ற அடிமைகளாக மாற்றும் கும்பலின் முக்கிய குற்றவாளி கைது.

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களை இணையக் குற்ற அடிமைகளாக மாற்றும் சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த அப்துல்காதர், சையது ஆகியோரின் மூலமாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர் ஒன்பது பேரை லாவோஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இதுபோன்று வேலைக்குச் சேர்ந்தவர்கள் அங்கு இணையக் குற்ற அடிமைகளாக மாற்றப்பட்டு தவித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில், சேலம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அப்துல் காதர், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கர் சர்காரைப் பிடிக்க காவல்துறையினர் வலை விரித்தனர்.

இது தொடர்பாக விமான நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிப்பு அறிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோல்கத்தா விமான நிலையத்தில் சங்கர் சர்கார் கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறையினர் அங்குள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பின்னர் அவரை அழைத்து வந்து சேலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவரது பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.