பலுசிஸ்தானின் மனித உரிமைகள் விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோஜன் ஜோசப் அழைப்பு விடுத்திருந்த இந்த கலந்துரையாடலில் பிரபல அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பலவந்தமாக காணாமல் போதல்கள், கொலைகள் மற்றும் இதர அட்டூழியங்கள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றதாகவும், அந்த மாகாண மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை தடுக்க இராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உடன்பாடு ஏற்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பலுசிஸ்தானில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உடனடி கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை பாகிஸ்தான் அரசு துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.