சிரியாவில் பங்காளிகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்: ஜோ பைடன்

சிரியாவில் உள்ள தனது பங்காளிகளுடனும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள், அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசைக் கவிழ்த்தனர். அதனைத் தொடர்ந்து உருவாகக்கூடிய வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள சிரியாவுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் என்று திரு பைடன் கூறியுள்ளார்.

“இத்தனை காலத்துக்குப் பிறகு ஒரு வழியாக அசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது,” என்று வெள்ளை மாளிகையில் சில தரப்பினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் வண்ணம் சிரியாவில் வெகுவிரைவில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து திரு பைடன் கருத்துரைத்தார்.

சுமார் ஒருவார காலத்தில் திரு அசாத்தின் ஆட்சியைக் கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கு வட்டாரம் மாறுபட்டிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொண்டு திரு பைடனும் அவரது முன்னணி பாதுகாப்பு அதிகாரிகளும் நிலவரத்தை ஆராய்ந்தனர்.

தற்போது சிரியா, அபாயகரமான நிலையையும் நிலையற்ற சூழலையும் எதிர்நோக்குவதாக திரு பைடன் குறிப்பிட்டார். பல ஆண்டுகளில் முதன்முறையாக ர‌ஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றின் தாக்கம் சிரியாவில் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டினார்.

“பல ஆண்டுகளாக ஈரான், ஹிஸ்புல்லா, ர‌ஷ்யாதான் அசாத்துக்கு ஆதரவாக இருந்து வந்தன. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் அந்த மூன்று தரப்புகளின் ஆதரவும் சரிந்தது. அவை மூன்றும் நான் (அதிபராக) பதவியேற்றபோது இருந்ததைவிட பெரிய அளவில் வலுவிழந்திருப்பதுதான் அதற்குக் காரணம்,” என்று 2021ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற திரு பைடன் விவரித்தார்.

அபாயகரமான நிலையையும் நிலையற்ற சூழலையும் எதிர்கொள்ளவிருக்கும் சிரியாவுக்கு அமெரிக்கா, தன்னால் முடிந்த அம்சங்களில் உதவும் என்று திரு பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

“அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி நம்மிடையே இருக்கும். இவ்வேளையில், அபாயத்தைக் கையாள ஏதுவாக சிரியாவில் உள்ள எங்கள் பங்காளிகளுடனும் இதில் தொடர்புடையோருடனும் அமெரிக்கா ஒன்றிணைந்து பணியாற்றும்,” என்றார் திரு பைடன்.

எனினும், சிரியாவின் எதிர்காலம் குறித்த திட்டத்தை வரைய அமெரிக்கா திட்டமிடவில்லை என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

“வருங்கால சிரியாவை அந்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் உருவாக்குவர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.