சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தமது நான்காண்டு பதவிக் காலத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

இரண்டாம் முறை அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டிரம்ப், 2025 ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்க இருக்கிறார்.

ஏராளமான சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி அளித்த அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தை ஒரு தேசிய நெருக்கடியாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றுவதற்கான விரிவான நடவடிக்கைக்கு அமெரிக்க மத்திய அரசாங்கத் துறைகளின் வளங்களை அவர் திரட்டக்கூடும்.

மேலும், தாம் பதவி ஏற்கும் முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை பெறும் முறைக்கு முடிவுகட்ட முயற்சி எடுக்கப்போவதாகவும் ‘என்பிசி நியூஸ்’ ஊடகத்துடனான நேர்காணலின்போது டிரம்ப் தெரிவித்தார். அந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்றது.

பெற்றோர் எந்த நாட்டினராக இருந்தாலும் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்குக் குடியுரிமை வழங்கும் முறை அது.

2022 ஜனவரி மாத நிலவரப்படி, நாடு முழுவதும் ஏறத்தாழ 11 மில்லியன் பேர் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மதிப்பிட்டு இருந்தது.

தற்போதைய நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

டிரம்ப்பைப் பேட்டி கண்ட கிறிஸ்டன் வெல்கர், “சட்டபூர்வ அனுமதி இன்றி தங்கி இருக்கும் அனைவரையும் வெளியேற்றுவதுதான் உங்களது திட்டமா?,” என்று கேட்டார்.

“அப்படித்தான் செய்தாக வேண்டும். செயல்படுத்த கடினமாக இருப்பினும், சட்டமும் அதிகாரமும் அதற்குத் துணை புரியும்,” என்று டிரம்ப் பதிலளித்தார்.

இதற்கு முன்னர் 2017 முதல் 2021 வரை அதிபராக இருந்தபோது, குடியேறிகள் வெளியேற்ற நிவாரணம் மற்றும் வேலை அனுமதிக்கான திட்டத்தை ரத்து செய்ய முயன்றார்.

இருப்பினும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

Leave A Reply

Your email address will not be published.