உறவுகளைத் தேடும் போராட்டத்தை கொச்சைப்படுத்த அரசு கடும் முயற்சி.
உறவுகளைத் தேடும் போராட்டத்தை
கொச்சைப்படுத்த அரசு கடும் முயற்சி
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் குற்றச்சாட்டு.
“அப்பட்டமான பொய்களைச் சொல்லி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமது போராட்டத்தை இலங்கை அரசு கொச்சைப்படுத்த முனைகின்றது.”
– இவ்வாறு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
கல்முனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று கூறியிருந்தார் . அவ்வாறு அவர்கள் வெளிநாடு சென்றிருந்தால் ஸ்ரீலங்கா விமான நிலையத்தினூடாக சென்றிருக்க வேண்டும். இவ்வாறு சென்றால் இலங்கை அரசுக்கு தெரியாமல் எதுவும் நடைபெற்றிருக்காது.
அப்படியானால் அரசு சொல்லட்டும் யார் யாருக்குக் கடவுச்சீட்டுக் கொடுத்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்தால் நாங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை. இப்படியான அப்பட்டமான பொய்களைச் சொல்லி எமது போராட்டத்தை இலங்கை அரசு கொச்சைப்படுத்த முனைகின்றது.
எமது தேடல் தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. புலனாய்வுப் பிரிவினர், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உறவுகளைத் தேடும் எமது போராட்டம் தொடருகின்றன. எமக்கான நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இலங்கை அரசு உண்மையைக் கூறியே ஆக வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய போராட்டத்தில் 78 உறவுகளை இழந்தும் எமது போராட்டம் தொடர்கின்றது .
எமது போராட்டத்துக்குப் பக்க பலமாக நின்ற ஊடகவியலாளர்களான தவசீலன், குமணன் ஆகியோர் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் தாக்கப்பட்டதை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும், எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கே.புவனேஸ்வரியும் கலந்துகொண்டார்.