முல்லைத்தீவில் ,குழிக்குள் இருந்து வெளியான 40 குண்டுகள்
கடும் மழையினால் மண் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிகுண்டு குழி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் (08) பொலிஸாரால் பல வெடிகுண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த வெடிகுண்டு குழியில் சுமார் 40 வகையான வெடிகுண்டுகள் இருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழியில் இருந்த குண்டுகள், போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடிகுண்டுகளை பார்த்த நபர் ஒருவர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் வந்து அந்த இடத்தை பாதுகாத்துள்ளனர்.
வெடிகுண்டு குழிக்குள் இருந்த வெடிகுண்டுகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்வதா, இல்லையேல் இந்த இடத்தில் வைத்து அழிப்பதா என்பது குறித்து இதுவரை உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அறிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.