ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐஎன்எஸ் துஷில்’ இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது
புது தில்லி: ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போா்க்கப்பலான ‘ஐஎன்எஸ் துஷில்’ இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.
ரஷியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.
4 போா்க்கப்பல்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷியாவும் இந்தியாவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் கையொப்பமிட்டன. அதன்படி 2 போா்க்கப்பல்களை இந்தியாவிலும் 2 போா்க்கப்பல்களை ரஷியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
ரூ.20,000 கோடியில் கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது ஏவுகணைகளுடன் கூடிய ஐஎன்எஸ் துஷில் போா்க்கப்பல் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது.
இந்தப் போா்க்கப்பல், அந்நாட்டில் உள்ள காலினின்கிராட் கடற்கரை நகரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்திய மற்றும் ரஷிய தொழிற்சாலைகளுக்கு இடையேயான வலுவான உறவை பிரதிபலிக்கும் வகையில் இந்த போா்க்கப்பல் தயாரிக்கப்பட்டது.
இதன்மூலம் செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு புதிய வரலாற்றை படைக்கவுள்ளன என்றாா்.
ஐஎன்எஸ் துஷில் போா்க்கப்பல் 125 மீட்டா் நீளமுடையது. 3,900 டன் எடையுடையது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் விதமாக இந்தப் போா்க்கப்பல் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.