இரண்டு மாளிகைகள் போதும் : ஏனைய மாளிகைகள் வேறு தேவைகளுக்காக பாவியுங்கள் – ஜனாதிபதி அநுர.
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பிரதேசங்களில் 50 அரச பங்களாக்கள் அமைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு இந்த பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜனாதிபதி அலுவலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகைகள் கொழும்பு, கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டிய மற்றும் பெந்தோட்டையில் அமைந்துள்ளன.
எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் கண்டி ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் வழமையான பாவனைக்கு உட்படுத்தப்படவில்லை.
மேலும், பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டு வந்த கொழும்பு 02 இல் அமைந்துள்ள விசும்பய தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக அதிகார வரம்பில் நுவரெலியாவில் பிரதமர் அலுவலகம் உள்ளது.
அரசு சொத்தை பராமரிக்க அதிக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த சொத்து பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, அந்த வளாகங்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறைமையொன்றை முன்மொழிவதற்காக ஜனாதிபதி மற்றும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.