2025ல் விமானப் பயணிகள் எண்ணிக்கை 5 பில்லியனைத் தாண்டும்’ : விமானப் பயணக் கட்டணம் 1.8 விழுக்காடு குறைவாக இருக்கும்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு, விமானப் பயணக் கட்டணம் மென்மேலும் கட்டுப்படியாகக்கூடிய நிலையை எட்டுவதால், உலகம் முழுவதும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 பில்லியனைத் தாண்டும் என்று ‘ஐயாட்டா’ எனப்படும் அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு கிட்டத்தட்ட 5.2 பில்லியன் விமானப் பயணிகள் இருப்பர் என்றும் இது 2024ஆம் ஆண்டின் 4.9 பில்லியன் பயணிகளைவிட 6.7 விழுக்காடு அதிகப் பயணிகள் என்றும் சங்கம் தெரிவித்தது. இதை சங்கம் தனது ஊடக தினமான டிசம்பர் 10ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் தெரிவித்தது.

பயணிகளிடம் இருந்து பெறப்படும் வருவாய், விமானக் கட்டணம், மற்ற துணைக் கட்டணங்கள் உள்பட, 2025ஆம் ஆண்டு 3.4 விழுக்காடு குறையும் என்றும் சங்கம் விளக்கியது.

சராசரி இருவழி விமானப் பயணக் கட்டணம் 2025ஆம் ஆண்டு அமெரிக்க டாலர் 380ஆக (S$509) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இது 2024ஆம் ஆண்டின் சராசரிக் கட்டணமான அமெரிக்க டாலர் 387 (S$387) என்ற நிலையில் 2025ஆம் ஆண்டு விமானப் பயணக் கட்டணம் 1.8 விழுக்காடு குறைவாக இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

விமானப் பயணிகளிடையே பயணத் தேவை 2025ஆம் ஆண்டு எட்டு விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் பயணத் தேவை 11.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதுவே 2024ஆம் ஆண்டு 18.6 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நாடுகள் விசா வழங்குவதை, குறிப்பாக சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில், எளிதாக்கியதே காரணம் என்றும் கூறப்படுகிறது.

விமானக் கொள்ளளவு அதிகரித்து வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு விமானப் பயணங்கள் முதல் முறையாக 40 மில்லியனை எட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது 2024ஆண்டு இருக்கக்கூடிய விமானப் பயணங்களைவிட 4.6 விழுக்காடு அதிகம் என்றும் ஐயாட்டா கூறியது.

Leave A Reply

Your email address will not be published.