சபரிமலையில் 19 லட்சம் பக்தர்கள் தரிசனம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்து உள்ளது. இதுவரை 19 லட்சம் பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூசைகளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இவ்வாண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கத்தைவிட வயதான பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வருகை இவ்வாண்டு 30 விழுக்காடாக அதிகரித்து உள்ளது.

இதையொட்டி 18ஆம் படியில் காலதாமதத்தைக் குறைக்க தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தப் பருவத்தில் செவ்வாய்க்கிழமை வரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது கடந்த ஆண்டு இதே நாளில் சாமி தரிசனம் செய்தவர்களைவிட இந்த எண்ணிக்கை மூன்றரை லட்சம் அதிகம்.

மண்டலப் பூசைக்கு இணையத்தில் முன்பதிவு முடிந்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு மூலம் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இனி வரும் நாள்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சாமி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனடியாக மலையிறங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் வலியுறுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.