05. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! : வெற்றிச் செல்வன்
பகுதி 05
சென்னையில் எனதும் மாதவன் அண்ணாவினதும் வேலைகள் கூடிக்கொண்டு போய் கொண்டிருந்தன . கடிதத் தொடர்புகள் எங்கள் வெளியீடுகள் போன்ற பல வேலைகள். நாங்கள் எமது இறந்த தோழர்களின் நினைவாக சுந்தரம் , ஊர்மிளா தேவி, காத்தான் கிருஷ்ணகுமார் போன்றவர்களின் நினைவுத் தபால்தலைகளை சிவகாசியில் அச்சடித்து பார்சல் சென்னைக்கு வரும் வழியில் மணப்பாறை வருவாய்த்துறை செக்போஸ்டில் பிடித்துவிட்டார்கள்.
உமா மகேஸ்வரன் எமது பயிற்சியாளர் சேகரை கூப்பிட்டு இரண்டு நாளில் மதுரை போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் மணப்பாறை விஷயத்தை கவனிக்க சொன்னார் சேகரும்நானும் மதுரை போய் சேகர் மதுரையில் தனது உறவுக்காரர் இன் மொத்த விற்பனைக் கடையில் என்னைத் தங்க வைத்தார்.
சேகர் முத்திரை பார்சல் பிடிப்பட்ட காரணத்தை அறிந்து வந்து கூறினார் வரி கட்டாததால் பிடிபட்டதாக ,பின்பு நான் மட்டும் மணப்பாறை போய் செக்போஸ்ட் அலுவலகத்தில் விவரம் கோரி வரி விபரங்கள் கேட்டுகொண்டிருக்கும்போது. தூரத்தில் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் என்ன விஷயம் என விபரம் கேட்டார்.பின்பு நீங்கள் சிலோன் ஆ என கேட்டார். நான் மறுத்துவிட்டு பின்பு உண்மையை ஒத்துக் கொண்டேன் நீங்கள் விடுதலைப் புலிகளா எனக்கேட்க நான் ஆம் என்றேன்.அக்காலத்தில் எல்லா இயக்கங்களையும் விடுதலைபுலிகள் என்றே கூறுவார்கள்.
நான் துணிந்து ஒரு பொய்யை கூறினேன் வருவாய்த்துறை அமைச்சர் எஸ் டி சோமசுந்தரம் தான் அனுப்பினார் என்று. உடனடியாக என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் வருவாய் துறை அதிகாரிகளிடம் போய் ,ரகசியம் பேசிவிட்டு வரி கட்டாமல் முத்திரைத்தாள் வெளியில் எடுப்பதற்கு உரிய ஆவணங்களை எனது கையில் கொடுத்தார்.
அடுத்து வரும் லாரியில் சென்னைக்கு அனுப்பி விடுவதாகவும் சென்னையில் பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார் பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தேநீர் சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து சென்னை போகும் பஸ்ஸில் அனுப்பி வைத்தார் பஸ் புறப்படும் முன் தன்னை யாரென்று அறிமுகப்படுத்தினர் அவர் மணப்பாறை கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர். அவருக்கு நன்றி கூறி சென்னை புறப்பட்டு வந்தேன்.
சென்னையில் எங்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா படி, ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் சாப்பாட்டு செலவுக்கு தந்துவிடுவார்கள். நானும் மாதவன் அண்ணாவும் காலை உணவு சின்னபிரெட் ஐம்பது காசு, தேநீர் 25 காசு. கடலை மிட்டாய் 10 காசு நமக்கு காலை உணவு ஒரு ரூபாய்க்குள் முடிந்துவிடும். மதியம் எப்பவும் சைவ அளவு சாப்பாடு தான் அளவுச் சாப்பாடு ஒரு ரூபாய் 50 காசு நாங்கள் சர்வர் நண்பரை நன்றாக பழகிக்கொண்டு, அவரிடம் சாம்பார் திரும்பத் திரும்பக் பெறுவோம்.
கடை முதலாளிக்கு தெரிந்தால் திட்டுவார் இப்படியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியில் வந்து கடலைமிட்டாய் வாழை பழம் சாப்பிடுவோம்.இரவு உணவு பக்கத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ் க்கு போ அளவுச் சாப்பாடு அங்கு மீன் குழம்பு மட்டன் குழம்பு கோழி குழம்பு கிடைக்கும் வெறும்குழம்பும் மட்டும்தான். அளவு சாப்பாடு விலை ஒரு ரூபாய் 75 காசு.அங்கு மீன் மட்டும் வாங்க சாப்பிட ஆசை இருந்தாலும் வாங்கி சாப்பிட காசு பத்தாது. மீன் கோழி மட்டன் எல்லாம் ஐந்து ரூபாய் தான் இருக்கும். சிலவேளைகளில் நமது உணவு செலவு கூடிவிட்டால் ( பத்து ரூபாய்க்கு) நானும் மாதவன் அண்ணாவும் போய் சைக்கிள் ரிக்ஷாகாரன் சாப்பிடும் கதம்ப சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம்.
சாப்பாடு என்பது சாப்பாட்டு கூடை காரர்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் ஆட்களுக்கு அவரவர் வீடுகளிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பி சாப்பாட்டு கேரியரை எடுத்து வரும்போது நிச்சயம் மிச்சம் இருக்கும் உணவு வகைகளை ஒன்றாகப் பிசைந்து மிக பெரிய ஒரு கைப்பிடி அளவு தரும் உணவுதான் கதம்ப சாப்பாடு விலை 50 காசு..
எமது வீட்டில் வைத்து உமா மகேஸ்வரனுக்கு நிரஞ்சன்னுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வளர்ந்து பிற்காலத்தில் நிரஞ்சன்கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது. அது சம்பந்தமாக தொடர்கள் முடிந்த பின்பு எழுதுவேன்.
எமது வேலைகள் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும்தமது தலைவர்களை ஜாமீனை ரத்து செய்து திரும்ப கைது செய்வதற்காக எம்ஜிஆர் அரசு ,மோகனதாஸ் உளவுத்துறை தலைவர் முயற்சி செய்வதாக தகவல்கள் வந்தன.
ஒரு நாள் புலவர் புலமைபித்தன் இடம் ஒரு செய்தியை எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் அவர்கள் கொண்டு வந்தார். அவசரமாக உமா மகேஸ்வரனையும் ,மாறனையும் சந்திக்க வேண்டுமென மிகஅவசரமும் கூட என, மாறன் வந்த பின்பு மாறன் என்னையும் கூட்டிக்கொண்டு புலவர் புலமைப்பித்தன் வீட்டை போனபோது, மிக பதட்டத்தோடு, மதுரையில் இருந்து பிரபாகரன் அமைச்சர் காளிமுத்து மூலம் ரகசியசெய்தி அனுப்பி இருப்பதாக. தங்கள் ஜாமீன் ரத்து செய்து திரும்ப கைது செய்யும் முன் தானும் ராகவனும் இலங்கைக்கு தப்பி செல்வதாகவும் உமாமகேஸ்வரன் யும் நண்பர்களையும் உடன் தப்பிப் போகும் படியும் செய்தி அனுப்பியிருந்தார்.
நாங்களும் நன்றி கூறி வந்து உமா மகேஸ்வரன் இடம்விபரத்தை கூறினோம். உமா பிரபாகரனை நம்ப முடியாது எங்களை தப்பிப் போக சொல்லிவிட்டு தான் போக மாட்டான் அப்படி செய்தால் எங்களுக்கு தான் பிரச்சனை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
பிரபாகரன் தப்பிப் போன செய்தி இரண்டு நாளில் எனக்கு கிடைத்தது. உடனடியாக நாங்களும் பரபரப்பாக அடுத்தகட்ட நிலைக்கு வேலைகளைத் தொடங்கினோம் உமா மகேஸ்வரன் அமைந்தகரையில் மிக ரகசியமாக தங்கியிருந்தார் வீட்டிலிருந்து இடம் மாறினார் மாறன் என்னை முதல் முறையாக அந்த இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்த முக்கிய பொருட்கள் ஆவணங்கள் டைப்ரைட்டர் ரேடியோ போன்றவற்றை என்னிடம் ஒப்படைத்தார்.
நான் எமது ரகசிய அலுவலகம் என நினைத்த இடத்தில் அப்பொருட்களை கொண்டுவந்து வைத்தேன். உமா மகேஸ்வரன் தலைமறைவாக முடிவு செய்தார் எமது அலுவலகம் வந்து பணம் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பவர் குறித்துக் கொடுத்த அதே நேரம் மாறன் கந்தசாமி பெரிய செந்தில செங்கல்பட்டு முகாம் வேலைகள் எப்படி எப்படி செய்ய வேண்டும் என நாங்கள் ஒருவருக்கொருவர் தேவையேற்படின் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்கூறினார்.
இரவு அம்பாசடர் காரில் கந்தசாமி யோடு வந்து என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணி போல் கலைஞர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு சென்றோம். அங்கு கலைஞர் எல்லா விபரங்களையும் கேட்டு விட்டு தப்பி ஓடுவது தவறு என்றும் அது உங்களை இந்தியாவில் ஒரு குற்றவாளி போல் காட்டும் நீங்கள் பிற்காலத்தில் இந்தியாவில் உங்கள் போராட்டத்தை தொடர முடியாது. உங்களை திரும்ப கைது செய்தால் பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணையாக நின்று போராட்டம் நடத்துவோம். உங்களை அவ்வளவு எளிதில் இலங்கைக்கு ஒப்படைக்க முடியாது நாங்கள் மத்திய அரசோடும் அதைப்பற்றி பேசுகிறோம் என எங்களுக்கு தைரியம் சொன்னார்.
உமா மகேஸ்வரன் தலைமறைவாக எண்ணத்தைக் கைவிட்டு எமது வேலைகளை எச்சரிக்கையாக செய்தோம். ஆனால் அடுத்த நாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உமா கண்ணன் நிரஞ்சன் கையெழுத்துப் போட போகும் போது அவர்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். மாறன் உடனடியாக எங்களுக்கு செய்தியை பரிமாறிவிட்டு, மிகத் திறமையாக எங்களை எங்களுக்குரியவேலைகளை ஒழுங்குபடுத்தினார. ஆனாலும் நாங்கள் திகிலோடு ஒரு வித பயத்தோடு தான் இருந்தோம்.
தொடரும் …