வெளிநாட்டு மாணவர்களை எச்சரிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்.
பல கல்லூரிகளில் மாணவர்கள் இந்த வாரம் இறுதித் தேர்வுகளை முடித்துவிட்டு குளிர்கால விடுமுறைக்குத் தயாராகி வரும் நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், சவுத் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உயர்கல்வி நிலையங்கள், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக தங்கள் அனைத்துலக மாணவர்களை வளாகத்திற்குத் திரும்புமாறு அறிவுறுத்துகின்றன.டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
டிரம்ப், முன்னைய ஆட்சிக் காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்தக் கொள்கை அப்போது வெளிநாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை முடக்கியது.
டிரம்ப் தனது பதவிக் காலத்தில், தடைசெய்யப்பட்ட பயணப் பட்டியலில் மேலும் சில நாடுகளைச் சேர்த்தார். இம்முறை அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதும் அந்தக் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க விரும்புவதாகப் பேசியுள்ளார்.
“ டிரம்ப் பதவியேற்றவுடன் பயணத் தடை விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது,” என்று கார்னெல் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய கற்றல் அலுவலகம் நவம்பர் மாத இறுதியில் தனது இணையத்தளத்தில் மாணவர்களை எச்சரித்தது. ஜனவரி 21ஆம் தேதி அன்று வசந்தகாலப் பருவ வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவிற்குத் திரும்பும்படி அது வெளிநாட்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
“இந்தத் தடையில் டிரம்ப்பின் முதலாவது நிர்வாகத்தில் குறிவைக்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் அடங்குவார்கள். கிர்கிஸ்தான், நைஜீரியா, மியன்மார், சூடான், தான்சானியா, ஈரான், லிபியா, வட கொரியா, சிரியா, வெனிசுவேலா, ஏமன், சோமாலியா ஆகியவை அவை. இந்தப் பட்டியலில் குறிப்பாக சீனா, இந்தியா சேர்க்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
எல்லையில் ஆவணங்களைச் செயலாக்குவதில் தாமதம் ஏற்படுவதற்குத் தயாராக இருக்குமாறு கல்லூரிகள் அனைத்தும் மாணவர்களை எச்சரித்து வருகின்றன.