ஆஸ்திரேலியா,இந்தியா மூன்றாவது டெஸ்ட் இன்று ஆரம்பம் .
பிரிஸ்பேனில் மூன்றாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. வான் மழையை மிஞ்சி ரோகித், கோலி உள்ளிட்ட பேட்டர்கள் ரன் மழை பொழிந்தால், இந்தியா வெற்றி பெறலாம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் இந்தியா, அடிலெய்டில் ஆஸ்திரேலியா வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, இப்போட்டியில் இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறுவது பலவீனம். கடந்த ஒரு ஆண்டில் 6 முறை 150 அல்லது அதற்கு குறைவான ரன்னில் ஆல் அவுட்டாகியுள்ளது. 2024-25 சீசனில், முதல் இன்னிங்சில் அனுபவ கேப்டன் ரோகித் சர்மா (6.88), கோலியின் (10) ரன் சராசரி மோசமாக உள்ளது. பெர்த் டெஸ்டில் சதம் அடித்த கோலி ஓரளவுக்கு ‘பார்மை’ மீட்டார். ரோகித் இக்கட்டான நிலையில் உள்ளார். அடிலெய்டு டெஸ்டில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய இவர் (3, 6 ) சோபிக்கவில்லை. பிரிஸ்பேனில் மீண்டும் துவக்க வீரராக களமிறங்கலாம். பெர்த் டெஸ்டில் 161 ரன் விளாசிய ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில் பொறுப்பாக விளையாட வேண்டும். ரிஷாப் பன்ட், நிதிஷ் குமாரின் அதிரடி தொடரலாம்.
பந்துவீச்சு பலமாக உள்ளது. ‘வேகத்தில்’ பும்ரா, சிராஜ் அசத்துகின்றனர். ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா இடையே போட்டி காணப்படுகிறது. ரோகித் ஆதரவு ஹர்ஷித்திற்கு உண்டு. முதலிரண்டு டெஸ்டில் ‘ஸ்பின்னர்’கள் வாஷிங்டன் சுந்தர், அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். இப்போட்டியில் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பை எதிர்பார்க்கிறார். அன்னிய மண்ணில் பேட்டிங்கில் கைகொடுப்பது இவருக்கு சாதகம்.
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. கடந்த இரு டெஸ்டில் மொத்தம் 19 ரன் தான் எடுத்துள்ளார். 2024ல் இவரது டெஸ்ட் ரன் சராசரி 23.20 ஆக சரிந்துள்ளது. பிரிஸ்பேனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (2024) எதிராக துவக்க வீரராக களமிறங்கி 91 ரன் எடுத்தார். இதனால் துவக்க வீரராக களமிறக்கப்படலாம். அடிலெய்டு டெஸ்டில் அரைசதம் கடந்த லபுசேன் நம்பிக்கை அளிக்கிறார். இந்தியாவுக்கு டிராவிஸ் ஹெட் தான் ‘தலைவலியாக’ உள்ளார். அடிலெய்டில் 140 ரன் விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். இவரை இந்திய பவுலர்கள் விரைவில் வெளியேற்ற வேண்டும்.
பிரிஸ்பேனின் டெஸ்டின் இன்றைய முதல் நாளில், இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு உள்ளது. 2, 3வது நாளில் பெரிய பாதிப்பு இல்லை. 4, 5வது நாளில் மழை குறுக்கிடலாம். மழை அடிக்கடி தலை காட்டுவது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது.
பிரிஸ்பேன் காபா மைதான ஆடுகளம் ‘வேகங்களுக்கு’ கைகொடுக்கும். பந்துகள் ‘பவுன்ஸ்’ ஆகும். 10 மி.மீ., அளவுக்கு புல் வளர்ந்திருப்பதால், மைதானமும் ஆடுகளமும் ஒரே மாதிரி இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில்,”ஆடுகளம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவு புற்கள் காணப்படவில்லை,”என்றார். இம்மைதானம் கம்மின்சிற்கு ராசியானது. இங்கு 7 டெஸ்டில் 40 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணி 1989-2020 வரை, 31 டெஸ்டில் தோற்கவில்லை. இங்கு 2021ல் இந்தியா முதல் வெற்றியை பெற்றது. இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வென்றது.
பிரிஸ்பேனில் பங்கேற்ற 7 டெஸ்டில் இந்தியா 5ல் தோற்றது. ஒரு வெற்றி, ஒரு போட்டியை ‘டிரா’ செய்தது.
ஆஸ்திரேலிய ‘லெவன்’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ஹேசல்வுட் இடம் பெற்றுள்ளார். ஸ்காட் போலந்து நீக்கப்பட்டுள்ளார்.