இம்ரான் கான் மீது புதிய ஊழல் வழக்குபதிவு .
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த போது, உலக நாடுகளின் தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், தனிப்பட்ட முறையில் முறைகேடாக விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
அரசு கருவூலத்திற்கு வரும் பரிசுப் பொருட்களை தோஷகானா துறை பேணி காத்து வரும் நிலையில், இந்த முறைகேட்டில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பீபி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இஸ்லமாபாத் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில், இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட் உத்தரவித்தது. அதேவேளையில், அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கிலும் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு கருவூலத்தில் இருந்த விலை உயர்ந்த ஆபரணத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பீபி மீது புதிய முறைகேடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக சிறையில் இருந்த இருந்த இம்ரான் கானும், ஜாமினில் இருக்கும் புஷாரா பிபியும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது, இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தனர். அதேவேளையில், இந்த வழக்கில் டிச.,18ம் தேதி சாட்சியங்களை பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.