நேற்றைய யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தொடர்பானது . ..

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் (13.12.2024) காலை 09.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்புரையாற்றப்பட்டது. மேலும், வரவேற்புரையில் கெளரவ அமைச்சர், கெளரவ ஆளுநர் மற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ் ஆண்டு மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக 1303.42 மில்லியன் ரூபா இற்றைவரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், பல இன்னல்களை சந்தித்த யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்களிப்பும் அவசியம் எனவும், எமது அரசாங்கமானது இலங்கை மக்கள் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு செயலாற்றும் என்றும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் முன்னேற்றத்திற்கு ஒன்றிணைந்து வினைத்திறனாக செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், எமது அரசாங்கமானது கிராமங்களை நோக்கிய பாச்சலுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், வட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடிய நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு மேற்கொள்ளவுள்ளதாகவும்தெரிவித்து, அனைவரும் கட்சிபேதங்களின்றி மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரையில் 302.82 மில்லியன் ரூபாவும், பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் 87.09 மில்லியன் ரூபாவும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் 538.95 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் குறிப்பிடப்பட்டது. மேலும், மீள்குடியேற்றம், சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ,கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கெளரவ சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட கட்டளை தளபதி மற்றும் கடற்படைத் தளபதியின் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.