டிரம்ப் அரசாங்கத்தின்கீழ் பாதிப்பு மிகுந்த நாடுகளில் தாய்லாந்து

டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்பதற்கிடையே, அமெரிக்காவின் 39 நட்பு நாடுகள் எதிர்நோக்கக்கூடிய பாதிப்புகளை மதிப்பிடும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் புத்தாக்க, தொழில்நுட்பத் தகவல் அறநிறுவனம் அதன் ஆராய்ச்சியில் கண்டறிந்ததன்படி, அதிக பாதிப்பை எதிர்நோக்கும் பத்து நாடுகளில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

அத்துடன் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே ஆசிய நாடாகவும் தாய்லாந்து விளங்குகிறது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் அளவைக் காட்டிலும் ஏற்றுமதி அதிகப்படியாக இருத்தல், தற்காப்பு தொடர்பில் சராசரிக்கும் குறைவாகச் செலவிடுதல் ஆகியவை தாய்லாந்து எளிதில் பாதிப்படையக்கூடிய கூறுகளாக ஆய்வறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தாய்லாந்துடன் மெக்சிகோ, சுலோவேனியா, ஆஸ்திரியா, கனடா ஆகியவை முதல் ஐந்து இடங்களில் வந்துள்ளன.

தாய்லாந்து போலவே மற்ற நான்கு நாடுகளிடமும் வர்த்தக உற்பத்தி, சராசரிக்கும் கீழ் தற்காப்புக்காகச் செலவிடுதல் ஆகிய குறைபாடுகள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மெக்சிகோவும் தாய்லாந்தும் அமெரிக்காவுடன் ஆக அதிக வர்த்தக உபரியைக் கொண்டிருந்தன. அத்துடன் ராணுவ, தூதரக, தொழில்நுட்பம் சார்ந்த பொருளியல் அம்சங்களில் சீனாவின் அதிகரிக்கும் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போகவும் இவ்விரு நாடுகள் தயக்கம் காட்டுவதாக அறிக்கை சுட்டுகிறது.

Leave A Reply

Your email address will not be published.