தமிழக கரையோரமாக வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு நேற்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று பிற்பகல் விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை அறிவித்தது.
அத்துடன் சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தென்பெண்ணையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
*தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 4,000 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.*
2,926 ஏரிகளில் 76% முதல் 99% வரை நீர் இருப்பு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 விழுக்காடு நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,140 பாசன ஏரிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040, சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரையில் 1,340 ஏரிகள் உள்ளன.