விவசாயிகள் மீண்டும் பேரணி – ஹரியானாவில் இணைய சேவை துண்டிப்பு
விவசாய பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களின் டெல்லி நோக்கி 101 பேர் செல்லும் ஜோடி யாத்திரையை இன்று மதியம் மீண்டும் தொடங்குகின்றனர். இதனை முன்னிட்டு ஹரியானா அரசு அம்மாநிலத்தின் அம்பலா மாவட்டத்தின் 12 கிராமங்களில் டிசம்பர் 17-ம் தேதி வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையை தடைசெய்துள்ளது.
கிஷான் மஸ்தூர் மோர்சா (கேஎம்எம்) தலைவர் சர்வான் சிங் பந்தேர், சனிக்கிழமை விவசாயிகள் குழு டெல்லி நோக்கிச் செல்லும் என்று தெரிவித்திருந்தார். டிசம்பர் 6-ம் தேதியில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கு விவசாயிகள் மேற்கொள்ளும் மூன்றாவது முயற்சி இதுவாகும். முன்னதாக டிசம்பர் 6 மற்றும் 8-ம் தேதி என இரண்டு முறை விவசாயிகள் டெல்லி செல்ல முயன்றனர். என்றாலும் அவர்கள் ஹரியானா போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பேரணி செல்ல அனுமதிக்கப்படவில்லை.
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக ஹரியானா எல்லையில் அம்மாநில போலீஸார் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனிடையே, ஹரியானா மாநில கூடுதல் தலைமைச் செயலாளார் (உள்துறை), பொது அமைதியைக் காக்கும் படிக்கு, இணைய சேவை மற்றும் மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அம்பலா மாவட்டத்தில் ஏற்கெனவே பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163 -ன் படி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து பேர் அல்லது அதற்கு மேல் குழுவாக கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.