இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களின் அரிசி பாவனைக்கு தகுதியற்றவை.

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றது என உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
75,000 கிலோகிராம் அரிசியை சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அரிசியை பரிசோதித்துள்ளனர்.
அப்படியான பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்குத் தகுதியற்றது என இனங்காணப்பட்டது. அதில், இரண்டு கன்டெய்னர்களில் இருந்த அரிசியில் பூச்சிகள் இருந்ததோடு, மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிளின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்ய தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி தற்போது இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (13ஆம் திகதி) பிற்பகல் வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% ஏற்கனவே சுங்கத்திலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.