உறவினரின் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லாததால் தனது விரல்களை வெட்டி எறிந்த இளைஞர்!

உறவினர் நிறுவனத்தில் வேலை செய்ய பிடிக்காததால் இளைஞர் தனது விரல்களை வெட்டி எறிந்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த மயூர் தர்பரா(32), தனது உறவினரின் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிகிறார்.
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, நண்பரின் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வழியில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து பார்த்த போது தனது இடது 4 விரல்கள் வெட்டப்பட்டிருந்தாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய அம்ரோலி காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மயூர் தர்பராவே தன்னுடைய விரல்களை வெட்டி கொள்வது தெரிய வந்துள்ளது.
விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அம்ரோலி ரிங் ரோடுக்குச் சென்று தனது பைக்கை நிறுத்தி விட்டு, கத்தியால் 4 விரல்களை அறுத்துள்ளார்.
ரத்தம் வெளியேறுவதை தடுக்க முழங்கையின் அருகே கயிற்றை கட்டியுள்ளார். கத்தி மற்றும் விரல்களை ஒரு பையில் வைத்து தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர் அவரின் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
தனது உறவினரின் நிறுவனத்தில் வேலை செய்ய மயூர் தர்பராவிற்கு பிடிக்கவில்லை. இதை அவரிடம் சொல்ல தைரியமில்லாததால் தனது விரல்களை வெட்டி நாடகமாடியுள்ளார்.