இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ரன் குவிப்பு.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடக்கிறது. முதல் நாளில் ஆஸ்திரேலியா, 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக துவங்கியது. பும்ரா ‘வேகத்தில்’ கவாஜா (21), மெக்ஸ்வீனி (9) வெளியேறினர். நிதிஷ் குமார் பந்தில் லபுசேன் (12) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்து தவித்தது.

இந்தியாவுக்கு டிராவிஸ் ஹெட் தொடர்ந்து ‘தலைவலியாக’ உள்ளார். கடந்த 6 இன்னிங்சில் 163, 18, 11, 89, 140, 152 என ரன் மழை பொழிந்துள்ளார். 2023ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்கு எதிராக சதம் (163) அடித்தார். உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் சதம் விளாசினார். தற்போதைய தொடரில் இரண்டு சதம் அடித்துள்ளார்.

2023-24ல் இந்தியாவுக்கு எதிராக ஹெட், 12 இன்னிங்சில் 808 ரன் (சராசரி 73.45) குவித்துள்ளார். இதே காலத்தில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உட்பட மற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராக மொத்தம் 23 இன்னிங்சில் 701 ரன் (சராசரி 30.47) தான் எடுத்துள்ளார்.

நேற்று டெஸ்டில் 9வது சதம் அடித்தார் ஹெட். இது, இந்தியாவுக்கு எதிராக இவரது 3வது சதம்.

பிரிஸ்பேனில் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக இரு இன்னிங்சிலும் கோல்டன் டக் (கிங் பேர்) அவுட்டானார். நேற்று சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு ஆண்டில் ஒரே மைதானத்தில் இரு கோல்டன் டக், சதம் அடித்த முதல் வீரரானார்.

கடைசி கட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ், கீப்பர் அலெக்ஸ் கேரி விரைவாக ரன் சேர்த்தனர். ஜடேஜா ஓவரில் கேரி ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். கம்மின்ஸ் 20 ரன் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 405 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கேரி (45), ஸ்டார்க் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, 5 விக்கெட் வீழ்த்தினார்.

ரோகித் சர்மாவின் கேப்டன்சி ஏமாற்றம் அளித்தது. டிராவிஸ் ஹெட் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் ‘பீல்டிங்’ வியூகம் அமைக்கவில்லை. ‘டீப் பாய்ன்ட்’, ‘டீப் ஸ்கொயர் லெக்’ என எல்லை பகுதியில் பீல்டர்களை நிறுத்தியிருந்தார். இதை பயன்படுத்தி ஒன்று, இரண்டு ரன்களை எளிதாக எடுத்தார் ஹெட். இவர் பந்தை துாக்கி அடித்து அவுட்டாகும் ‘தேர்ட் மேன்’ திசையில் பீல்டரை நிறுத்த தவறினார். தேநீர் இடைவேளைக்கு பின் ரவிந்திர ஜடேஜா, நிதிஷ் குமாருக்கு அதிக ஓவர் வழங்கினார். இருவரும் தடுமாற, ‘டி-20’ போல ஸ்மித், ஹெட் சேர்ந்து அதிரடியாக ரன் குவித்தனர்.

பிரிஸ்பேனில் அடுத்த மூன்று நாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை தொடர்ந்தால், இந்திய அணி தப்பிக்கலாம்.

நேற்று பந்துவீசிய (36.2வது ஓவரில்) போது சிராஜின் இடது முழங்காலில் திடீரென வலி ஏற்பட்டது. உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார். எஞ்சிய நான்கு பந்துகளை ஆகாஷ்தீப் வீசினார். சிறிது நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் சிராஜ் களமிறங்க, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.